Vatican News

இளையோருக்கு திருத்தந்தையின் உரை

இளையோருக்கு திருத்தந்தையின் உரை

வட மாசிடோனிய இளையோருக்கு திருத்தந்தையின் உரை

இளையோர் உட்பட, பலர், கனவு காணும் திறமையை இழந்துள்ளனர் என்பதே, தற்போது உள்ள பெரும் பிரச்சனை. இளையோர் கனவு காணாமல் போகும்போது, அவ்விடத்தை, நம்பிக்கையின்மையும், குறைகூறுதலும் நிறைத்துவிடுகின்றன.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

அன்பு நண்பர்களே, உங்கள் வரவேற்பிற்கும், உங்கள் நடனத்திற்கும், அனுப்பியிருந்த கேள்விகளுக்கும் நன்றி. நான் கடைசிக் கேள்வியிலிருந்து துவங்குகிறேன். Liridona, உன்னுடைய நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டபின், “நான் மிக அதிகமாகக் கனவு காண்கிறேனா?” என்று கேட்டிருக்கிறாய்.

இளையோர் கனவு காணாமல் போகும்போது…

ஒருவராலும், மிக அதிகமாகக் கனவு காண இயலாது. இளையோர் உட்பட, பலர், கனவு காணும் திறமையை இழந்துள்ளனர் என்பதே, தற்போது உள்ள பெரும் பிரச்சனை. இளையோர் கனவு காணாமல் போகும்போது, அவ்விடத்தை, நம்பிக்கையின்மையும், குறைகூறுதலும் நிறைத்துவிடுகின்றன. எனவே, அன்பு லிரிடோனா, அன்பு நண்பர்களே, உங்களால் மிக அதிகமாகக் கனவு காண இயலாது.

Liridona, உன்னுடைய மிகப்பெரிய கனவு என்ன என்பது நினைவிருக்கிறதா? கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் அனைவரோடும் இணைந்து, களைத்துப்போயிருக்கும் உலகிற்கு நம்பிக்கையளிப்பது, உன்னுடைய கனவு. இது, உண்மையாகவே, மிகச் சிறந்த கனவு. சில மாதங்களுக்கு முன், அல் ஆசாரின் பெரும் மதத்தலைவரும், என் நண்பருமான அகமத் அல்-தாய்யெப் அவர்களும், நானும் இணைந்து, இதையொத்த ஒரு கனவைக் கண்டோம். அந்தக் கனவின் விளைவாக, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் உடன்பிறந்தோராகக் காணவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓர் அறிக்கையில் இருவரும் கையொப்பமிட்டோம். எனவே, தொடர்ந்து கனவு காணுங்கள், பெரிதாகக் கனவு காணுங்கள்!

வீர சாகசங்களை விரும்பும் இளையோர்

இளையோர் வீர சாகசங்களை விரும்புகின்றனர் என்று, Bozanka கூறியுள்ளார். நன்மை தரும் வீர சாகசங்களை விரும்புவதும், அனுபவிப்பதும் இளையோராய் இருப்பதன் அழகு. லிரிடோனா கூறிய கனவை நனவாக்குவதைவிட, அதிக வீரம் நிறைந்த சாகசங்கள் உள்ளனவா? பிளவுபட்டு, சோர்ந்துபோயிருக்கும் இவ்வுலகை மேலும் பிளவுபடுத்த நமக்குச் சோதனைகள் வருகின்றன. அவ்வேளையில், ஆண்டவர் கூறிய, “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத்தேயு 5:9) என்ற சொற்கள், நம்மை எவ்வளவுதூரம் வந்தடைகிறது என்பதைச் சிந்திக்கவேண்டும். நாம் அனைவரும் இணைந்தால், மற்றோர் உலகத்தை உருவாக்க முடியும் என்ற கனவு நம்மை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

கனவுகளை பொறுமையுடன் செதுக்கவேண்டும்

கற்களில் சிலை வடிக்கும் பல சிற்பிகளைக் கொண்டது இந்நாடு. அச்சிற்பிகளைப்போல், நமது கனவு என்ற சிலையை, நாம் உருவாக்கவேண்டும். பொறுமையாக, கவனத்துடன், கல்லை சிறிது, சிறிதாக செதுக்கி, சிலையை உருவாக்குவதுபோல், நம் கனவுகளையும் செதுக்கவேண்டும்.

“நாம் காணும் மிகச் சிறந்த கனவுகள், அவசரத்தில் அல்ல, மாறாக, நம்பிக்கை, பொறுமை, அர்ப்பணம் ஆகியவற்றால் உருவாகின்றன. எவ்வித சவாலையும் ஏற்கத் துணியாத நடைப்பிணமாய் வாழ்வதை விடுத்து, தவறினாலும், தொடர்ந்து அர்ப்பண உணர்வுடன் பணியாற்றுங்கள்” (Christus Vivit, 142). கனவுகளையும், நம்பிக்கையையும் உருவாக்கும் கலைஞர்களாக மாற அஞ்சவேண்டாம்!

“இறைவனின் கரங்களில் ஒரு பென்சில்”

அன்னை தெரேசாவை எண்ணிப்பாருங்கள்: அவர் இங்கு வாழ்ந்தபோது, தன் வாழ்வு எங்கு முடிவடையும் என்பதை அவர் கற்பனை செய்திருக்க இயலாது. இருப்பினும், அவர், சாலையோரங்களில் வாழ்ந்தோரிடம் இயேசுவின் முகத்தைக் காண விழைந்த கனவை, தொடர்ந்து கண்டுவந்தார். “இறைவனின் கரங்களில் ஒரு பென்சில்”ஆக இருக்க அவர் விரும்பினார். அந்தப் பென்சிலைக் கொண்டு, இறைவன் வியக்கத்தக்க வரலாற்றுப் பக்கங்களை எழுதினார்.

அன்னை தெரேசாவைப்போல், நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நம் கனவுகள் திருடப்படுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. எத்தனையோ இடர்களும் தடைகளும் வரலாம். இருப்பினும், துணிவுடன் போராடவேண்டும். ஆனால், தனியே அல்ல! யாராலும் தனியே போராட இயலாது. Draganம், Marijaவும் கூறியுள்ளதுபோல், “எங்கள் ஒன்றிப்பு, இன்றைய சமுதாயத்தின் சவால்களை சந்திக்க சக்தி தருகிறது” என்பது உண்மை.

தனித்து சாதிக்க முடியாது

நமது கனவுகளை, வீர சாகசங்களாக்க மிகச்சிறந்த இரகசியம் இங்குள்ளது. நாம் யாரும் வாழ்வை தனித்து சந்திப்பதில்லை; யாரும் தங்கள் கனவுகளையும், சாகசங்களையும் தனித்து செயல்படுத்த இயலாது. இதோ, இங்கு நீங்கள் அனைவரும் இணைந்துவந்து கனவு காண்பது மிக முக்கியமானது.

இணைந்து செயல்படுவது எளிதல்ல என்பதை, Dragan, Marija இருவரும் கூறியுள்ளனர். குறிப்பாக, நம் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தும் டிஜிட்டல் உலகில், அடுத்தவரோடு இணைந்து செயல்படுவது மிகவும் கடினமாகிவருகிறது. இப்போது, என் வயதில், நான் கற்றுக்கொண்ட சிறந்த பாடம் என்ன தெரியுமா? ஒருவரை ‘நேருக்கு நேர்’ சந்தித்துப் பேசுவது எப்படி என்பதை நான் கற்றுக்கொண்டேன். தொழில்நுட்பங்கள் நிறைந்த டிஜிட்டல் தொடர்பு உலகில், உண்மையான தொடர்புகள் குறித்து நாம் குறைவாக அறிந்துள்ளோம்.

நேருக்கு நேர் சந்திப்பதும், செவிமடுப்பதும்

இளையோரை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தில் நாங்கள் கற்றுக்கொண்டது இதுதான்: இளையோரும், முதியோரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்து, பேசுவதும், செவிமடுப்பதும் மிக முக்கியம் என்பதை கற்றுக்கொண்டோம். நம்மை மேலும், மேலும் தனிமைப்படுத்த விழையும் இன்றைய உலகிற்கு ஒரு மாற்று மருந்து, ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திப்பது. தனிமைப்படுத்தப்பட்டு, துவண்டுபோய் நம்பிக்கை இழந்திருக்கும் உள்ளத்திற்கு, அடுத்தவரை, குறிப்பாக, வயதில் முதிர்ந்தோரை சந்திப்பது, சிறந்த மாற்று மருந்தாக அமையும்.

அன்பு நண்பர்களே, முதியோரை சந்திக்கவும், அவர்களது கதைகளைக் கேட்கவும் நேரம் ஒதுக்குங்கள். பெரிய மனிதர்களின் தோள்கள் மேல் ஏறி நிற்கும் சிறியோர், இன்னும் தூரமாகக் காணமுடியும் என்ற பழமொழியை மறந்துவிடாதீர்கள். உங்கள் நாட்டின், உங்கள் சமுதாயத்தின், முதியோர் காட்டிய ஞானத்தை ஏற்பதற்கு தயங்கவேண்டாம்.

இந்த சந்திப்பிற்காக மீண்டும் நன்றி கூறுகிறேன். பிளவுகளையும், மோதல்களையும் வளர்க்கும் இவ்வுலகிற்கு ஒரு மாற்றாக, இளையோர் முயற்சிகள் மேற்கொள்வது, எனக்கு பெரும் நம்பிக்கை அளிக்கிறது. வறியோருக்காக, வாழ்வைக் காக்கும் முயற்சிகளுக்காக, நேரம் செலவிடும் இளையோர், தங்கள் பொதுவான இல்லமான பூமியைக் காப்பதற்கு முயற்சிகள் எடுக்கும் இளையோர் ஆகியோரைக் காணும்போது நம்பிக்கை பிறக்கிறது. அன்னை தெரேசா உருவாக்கிய ஒரு செபத்துடன், நாம் இந்த சந்திப்பை, நிறைவு செய்வோம்.

ஆண்டவரே, என் கரங்கள் உமக்குத் தேவையா? (அன்னை தெரேசாவின் செபம்)

நோயுற்றோருக்கு, வறியோருக்கு தேவையில் உள்ளோருக்கு

உதவிகள் செய்ய, ஆண்டவரே, என் கரங்கள் உமக்குத் தேவையா?

ஆண்டவரே, இன்று என் கரங்களை உமக்குக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பர் தேவைப்படுவோரிடம் என்னை அழைத்துச் செல்ல

ஆண்டவரே, என் கால்கள் உமக்குத் தேவையா?

ஆண்டவரே, இன்று என் கால்களை உமக்குக் காணிக்கையாக்குகிறேன்.

அன்புள்ள ஒரு சொல் தேவைப்படுவோர் அனைவரிடமும்

நான் பேசுவதற்கு, ஆண்டவரே, என் குரல் உமக்குத் தேவையா?

ஆண்டவரே, இன்று என் குரலை உமக்குக் காணிக்கையாக்குகிறேன்.

எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் அன்பு செய்வதற்கு,

ஆண்டவரே, என் இதயம் உமக்குத் தேவையா?

ஆண்டவரே, இன்று என் இதயத்தை உமக்குக் காணிக்கையாக்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *